என்னுடைய இன்றைய காலைப் பொழுது வயலில் துவங்கியது. நீரை வயலில் இருந்து வெளியேற்ற வேண்டி இருந்தது. நிறைய வெளிநாட்டுப் பறவைகள் கண்மாய்களில் முகாமிட்டுள்ளன. இவ்வளவு பெரிய பறவைகளை நான் எங்கள் ஊரில் பார்த்ததில்லை. மண்வெட்டி மூக்கன்கள் பெரிய கொக்குகள் பிலேமிங்கோக்கள் வந்துள்ளன. சிறுவனாக இருந்த பொது என் அப்பாவுடன் நடந்து இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வயலுக்குப் போவோம். ஒரு மழை நாளில் வரப்பில் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று நரிகள் வரப்பில் விழுந்து ஓடின. நரிகள் எப்படி வரப்பு பொந்துகளில் உள்ள நண்டுகளுக்கு வலை விரிக்கும் என்று அப்பா சொல்லிக் கொண்டு வந்தார். நண்டு துளைக்குள் வாலை உள்ளே விட்டு கவ்விக் கொள்ளச் செய்யுமாம் நரி. அதை வெளியே மெதுவாக எடுத்துப் போட்டு உண்ணுவது தான் வேலை. வரப்பெங்கும் நண்டுகளின் ஓடுகள் சுடுகாடு போல கிடக்கும். நான் கேட்டுக் கொண்டே உடன் நடப்பேன். இப்போது பறவைகள் நிறைய தவளைகள் பூச்சிகளை தின்று கொண்டிருந்தன. முன்பு போல நண்டுகள் இல்லை. பூச்சி மருந்துகள் தான் காரணம். ஆனால் இப்போது கொஞ்சம் பரவாயில்லை.
இன்று நடவு செய்யும் பெண்களின் பாட்டும் காற்றும் மிதமாக இருந்தது. நடவு நடனம் நட நாடகம் நடு என்று சொற்களை போட்டு விளையாடிப் பார்த்தது மனது. உலகின் மூச்சு நாயகனான நடராசன் யோகத்தில் நின்றிருக்கும் நடனக் கோலம் என்று வயலை கண்டேன். இங்கே மூச்சு ஆடிக் கொண்டிருக்கிறது. அசைவும் மூச்சும் என்று மனம் சொல்லிக் கொண்டது. நடனம் நாட்டியம் நடவு நடு நாடகம் தமிழ் தான். கொண்டாட்டமான அசைவு தமிழ் தான். மரணத்தைக் கூட கொட்டடித்துக் கொண்டாடும் கூத்துக்குச் சொந்தக்காரர்கள் தமிழர் தானே. அவர்களின் மூர்த்தி தானே நடனக் கலைஞனாக இருக்க முடியும். சிந்துவில் இருந்து நட நடவு நடனம் நாடகம் நர்த்தனம்.,தமிழ் தான்..
- இளங்கோ கல்லானை முகநூலில்.
Post by Elango Kallanai.
No comments:
Post a Comment